வேதாகம படிப்பு

  • சிவப்பு குதிரை

    இந்த சிவப்பு குதிரையின் மீது சவாரி செய்யும் ஆவி, வெள்ளைக் குதிரையின் ஆவியைப் போன்ற மற்றொரு அசுத்த ஆவி. இந்தக் அசுத்த ஆவிகளின் செயல்களை நமது தேவன் அனுமதித்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இந்த ஆவி பின்வருவனவற்றைச் செய்கிறது:

    1.⁠ ⁠அது நமது இருதயங்களிலிருந்து சமாதானத்தைப் பறித்து, கோபம், பொறாமை மற்றும் ஒடுக்குதலைக் கொண்டுவருகிறது.

    2.⁠ ⁠அது நாம் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யத் தூண்டி, வன்முறை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கு வழிவகுக்கிறது.

    3.⁠ ⁠அது கொலை செய்வதற்காக ஒரு வாளையும் ஏந்தியிருக்கிறது, இது நமக்கு நாமே கேடு உண்டாக்கத் தக்கதான மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களை விதைக்கிறது.

    இந்தச் செய்தி நமது கர்த்தரால் திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, விசுவாசிகளாகிய நாம் சிவப்பு குதிரையின் ஆவியால் பாதிக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆகவே, இந்த ஆவிகள் இன்று நமது வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய முடியும்?

    உலகச் பொருளை சார்ந்திருக்கவோ, அதைத் துரத்தவோ, அல்லது அதை வணங்கவோ வேண்டாம்.

    நாம் உலகப் பொருளை விரும்பவோ, தேடவோ, அல்லது வணங்கவோ தொடங்கும்போது, ​ நம்மை அறியாமலேயே கொலை செய்யும் ஆவி நம்மை ஆட்கொள்ளக்கூடும். (யாக்கோபு 5:6 – முதல் வசனத்திலிருந்து வாசிக்கவும்)

    பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:10)

    தேவன் உங்களுக்குக் கொடுத்த கிருபை, வரங்கள் அல்லது திறமைகளை சுயநல ஆதாயத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்.

    இது பேராசையின் காரணமாக செல்வத்தைத் துரத்துவதிலிருந்து வேறுபட்டது. கர்த்தராகிய தேவன் தமது ராஜ்யத்தைக் கட்டுவதற்கு உதவும் வகையில் நமக்கு பல வரங்களையும் திறமைகளையும் கொடுத்திருக்கிறார். இதில் நமது வேலையும், நமது குடும்பங்களை பராமரிக்க அவர் வழங்கும் வழிகளும் அடங்கும். (யூதா 1:11 – 10-16 வசனங்களை வாசிக்கவும்). இந்தத் திறமைகளை நாம் உலக ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும்போது, ​​இந்தப் பூமியில் நம் ஆண்டவரின் ராஜ்யத்தை உண்மையாகக் கட்டுவதில் உள்ள நமது கவனத்தை இழக்க நேரிடலாம். முடிவில், நம் ஆண்டவருடன் நமக்குள்ள அன்பான உறவையும், நாம் அடைய விரும்பும் உலகத்தையும் நாம் இழக்க நேரிடலாம். யூதாஸுக்கு என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். அவனுடைய சக சீடர்கள் அவனை ஒரு “திருடன்” என்று நினைத்தபோது, ​​இயேசு அவனைத் தமது ஊழியத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமித்தார். ஏன்? நிதிகளை நிர்வகிப்பதில் யூதாஸுக்குத் திறமை உண்டு என்பதை இயேசு அறிந்திருந்தார். இருப்பினும், யூதாஸ் நிதிகளில் அதிக கவனம் செலுத்தி, இயேசுவையே இழந்தான்.

    முகஸ்துதி செய்வதற்காக தேவனுடைய வார்த்தையையோ அல்லது உண்மை நிலலையயோ திரிக்க முடியாது

    சில சமயங்களில், நாம் நல்லவர்களாக இருக்க விரும்புவதால், தேவனுடைய வார்த்தையின் தெளிவான சத்தியத்தை மக்களுக்குச் சொல்வதைத் தவிர்க்கிறோம். சத்தியத்தைக் கேட்பது கடினமாக இருக்கலாம், ஆனால் அது முடிவில் உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருகிறது. நாம் சமரசம் செய்துகொண்டாலோ அல்லது சத்தியத்தை நீர்த்துப் போகச் செய்தாலோ, சிறிது காலத்திற்கு ஒரு போலியான சமாதானத்தை நாம் உணரக்கூடும், ஆனால் அது உண்மையான சமாதானத்தைப் பறித்துக்கொள்ள பிசாசுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

    சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.(எசேக்கியேல் 13:10):

    நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும், நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார். (எசேக்கியேல் 13:22-23)

    உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல் சமாதானம் இருக்க முடியாது

    நாம் மனந்திரும்பாமல், நமது தவறுகளை மறைத்து, உண்மை எண்ணங்களையும் மறைத்து, பின்பு சமாதானம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக, உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் கர்த்தரிடத்திலும், மற்றவர்களிடத்திலும் அறிக்கையிட்டு மனந்திரும்புங்கள். (2 நாளாகமம் 7:14, புலம்பல் 3:40-41, யோவான் 14:23-27)

    என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் (2 நாளாகமம் 7:14)

  • அவர் நிமித்தமாகப் பாடுபடுதல்

    ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

    பிலிப்பியர் 1:29

    நம்முடைய பிறப்பிலிருந்தே பாடுகளை தவிர்க்க விரும்புகிறோம். பாடுகளை அனுபவிப்பது ஒரு கசப்பான காரியமாக நாம் கருதுகிறோம். நல்ல சுகத்தோடும், பாதுகாப்போடும் வாழ விரும்புகிறோம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொண்ட பொழுது, பாடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால் ஒரு விசுவாசி இரண்டு விதமான பாடுகளை சந்திக்க வேண்டியதாயிருக்கிறது. முதல் விதமான பாடுகள், உலகப்பிரகாரமான பாடுகளாக இருக்கிறது. இயேசு நம்மிடத்தில் வந்ததே, நமக்கும் இந்த உலகதிற்குமிடையே இருக்கும் தொடர்பை துண்டிக்க தான். நாம் உண்மையிலேயே இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்முடைய சுயமும், உலகப்பிரகாரமான குறிகோள்களும், ஆசைகளும் சாக வேண்டும். இயேசு நமக்குள் வாழ வேண்டுமானால், உலகத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். இயேசுவையும், உலகத்தையும் ஒரே சமயத்தில் நமக்குள்ளே வைத்திருக்க முடியாது. அனேகர் இயேசுவையும், உலகத்தையும் தங்களோடு வைக்க முயற்சி செய்து, இயேசுவினுடைய இரட்சிப்பின் முழு சந்தோஷத்தை அடையாமல் போகிறார்கள். இயேசு நம்மை உலகக் கவலையிலிருந்து விடுவிக்க வரவில்லை. அவர் நம்மை இந்த உலகத்திலிருந்தே விடுவிக்க வந்தார். நாம் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மாறி விட்டால், இந்த உலகத்தின் பாடுகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

    இன்னொரு விதமான பாடு நம்முடைய ஆண்டவருடைய சாட்சியாக இருப்பதின் நிமித்தம் வருகிறது. இந்தவித பாடு சுவாரஸ்யமானது. இயேசு மற்றவர்களுடைய இருதயத்தில் பிறப்பதற்காக நாம் பாடுபடுகிறோம். இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பதற்கே இயேசு நம்மை முன்குறித்திருக்கிறார். இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பது நமக்கு களிகூருதலை உண்டாக்குகிறது. இப்படிப்பட்ட பாடுகளுக்கு நம்மை சந்தோஷமாக ஒப்புக் கொடுக்கிறோம். இப்படி பாடு அனுபவிக்கும் போது ஆத்துமாக்களை பரலோக ராஜ்யத்திற்காக ஆதாயப்படுத்தும் பெரிய அறுப்பின் வேலையை நாம் செய்கிறோம். ஒவ்வொரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படும் போது இயேசு மகிமைப்படுகிறார். அவருடைய மகிமையிலே நம்முடைய மகிமை இருக்கிறது. இப்படிப்பட்ட பாடுகளையே நாம் தேட வேண்டும். நம்முடைய ஆண்டவர் கிருபையுள்ளவராக இருக்கிறார். இப்படிப்பட்ட பாடுகளை நாம் அனுபவிக்கும் போது ஒரு நிமிடம் கூட அவர் நம்மை துக்கப்பட விட மாட்டார். இங்கே பவுலுடைய வாழ்க்கையைப் பாருங்கள். பவுல் சிறைச்சாலையில் இருக்கிறார். அனேகர் அவரை விரோதிக்கிறார்கள். ஆயினும் நல்மனதிலோ, விரோதத்தினாலோ இயேசு பிரசங்கிக்கப்படுகிறதை நினைத்து சந்தோஷப்படுகிறார். நாம் இயேசுவின் சுவிசேஷத்திற்காக பாடு அனுபவிக்கும் போது ஒரு நாளும் சோர்ந்துப் போகமாட்டோம். பிதாவின் வலது பாரிசத்தில் இயேசுவோடு கூட இருப்பதை நாம் உணர்ந்து கொள்வோம். அதே சமயத்தில் நம்முடைய செய்கையினாலே இயேசு கிறிஸ்துவினுடைய பெரிய வெளிச்சம் அநேகரை தொட்டு அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தரும்.